• அருண் சரண்யா

முழுமையான ஈடுபாடு அற்புதங்களை நிகழ்த்தும் என்கிறது நவீன நிர்வாகம்.
அற்புதம் என்றால் மந்திர தந்திர விஷயம் அல்ல. ‘சுலபத்தில் இது நடந்துவிடாதே’ என நினைக்கப்படும் விஷயங்களையும்கூட முழுமையான ஈடுபாடு நடத்திக்காட்டும் என்பதே அதற்கு அர்த்தம்!
கவனச் சிதறல் இருந்தால் சிறப்பான திட்டங்கள்கூட எதிர்பார்க்கும் பலனை அளிக்காது.


துரியோதனை எடுத்துக் கொள்ளுங்கள். மரம் ஒன்றில் இருந்த பறவையின் கழுத்துக்கு குறி வைக்கும்போது அவனுக்கு மரம், கிளை, பறவை எல்லாமே தெரிந்தன. அதனால் அவன் குறி தப்பியது. மாறாக, அர்ஜுனன் குறி வைத்தபோது அவனுக்குத் தெரிந்தது பறவையின் கழுத்து மட்டுமே. அதனால்தான் ‘வில்லுக்கு விஜயன்’ என்ற பெயர் கிடைத்தது. முழுமையான ஈடுபாடு என்பதற்கு வில்வித்தையில் எடுத்துக்காட்டாக நின்றான் அர்ஜுனன்.
ஆதிசங்கரர் மனமுருகி வேண்டியதும் தங்க நெல்லிக் கனிகள் கொட்டி ஏழைப் பெண் செல்வம் அடைந்ததை படித்திருப்பீர்கள். அங்கே, சங்கரரின் பிரார்த்தனை கவனச் சிதறல் இல்லாத வேண்டுதல். அற்புதம் நடக்கக் கேட்பானேன்?
இதோ, இன்னொரு சம்பவத்தைக் காணுங்கள்.
காட்டின் நடுவில் ஒரு குடிசை. அந்தக் குடிசையின் வாசலுக்கு வந்து சேர்ந்தாள் அந்த மூதாட்டி. அதன் வாயிலுக்கு வெளிப்புறமாக நின்று கைகூப்பி வணங்கி னாள்.
உள்ளே இருந்தவர் திருமழிசை ஆழ்வார்.
அந்த மூதாட்டி தனது தினசரி காரியங்களை அன்றும் தொடர்ந்தாள். குடிலின் முற்றத்தை தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தாள். அப்போதே அவளுக்கு களைப்பாக இருந்தது.
குடிலின் வாசலில் பெரிய அளவு கோலமிட்டாள். ஆத்மார்த்தமாக அந்த செயலைச் செய்தாலும் அவளது உடல் முழுமையாக ஒத்துழைக்க வில்லை. கைகள் நடுங்கியதன் காரணமாக கோலம் கொஞ்சம் கோணல்மாணலாகத்தான் இருந்தது.
அருகிலிருந்த கிணற்றிலிருந்து நீர் எடுத்து அந்தக் குடிலை சுற்றியுள்ள மலர்ச் செடிகளுக்கு நீர் வார்த்தாள். இதற்குள் அவள் உடல் முழுவதுமாகவே தளர்ந்து விட்டது.
‘ம்மா’ என்ற குரல் கேட்டதும் அந்த திசையைப் பார்த்தாள். குடிலுக்குப் பின்புறம் கட்டப் பட்டிருந்தது ஒரு பசு. சற்று தள்ளியிருந்த புற்களை எடுத்து அதற்கு உணவாக அளித்தாள். பின் வாஞ்சையுடன் அதன் உடலைத் தடவிக் கொடுத்தாள்.
அன்றைய கடமையை முடித்துவிட்டு திருப்தியுடன் அங்கிருந்து நகரத் தொடங்கினாள். முடியவில்லை. சிறிது நேரமாவது உட்கார்ந்தாக வேண்டும் என்ற நிலை. தோட்டத்தின் ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
குடிலிலிருந்து வெளியே வந்த ஆழ்வார் அந்த மூதாட்டியை கருணையுடன் நோக்கினார். ‘இந்த தள்ளாத வயதில் ஒரு சல்லிக் காசுகூட எதிர்பாராமல் இந்த சேவைகளை தினசரி செய்கிறாளே!’ என எண்ணிய படியே அந்த முதியவளின் அருகில் சென்றார்.
அப்போது அயற்சி காரணமாக கண்களை மூடிக்கொண்டிருந்த மூதாட்டியின் மனம் ‘எனக்கு மட்டும் இளமை திரும்பிவிட்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும். சிரமமின்றி மேலும் பல சேவைகளை செய்யலாமே’ என எண்ணியது. அந்த எண்ணமே அவளுக்கு இனித்தது. இளமையைக்கூட தொண்டு செய்வதற்காகவே வேண்டிய அந்தப் பிரார்த்தனை தீவிரமானது. அவளது அந்த எண்ணம் உதடு களின் வழியாக வெளிப்பட்டது.
இந்த வார்த்தைகள் ஆழ்வாரின் காதுகளில் விழுந்தன. ‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்றார் ஆழ்வார். அடுத்த கணம் அந்த முதியவள் இளமை பெற்றாள். மெய்சிலிர்த்து நின்றாள்.
இறைவனுக்கு சேவை செய்ய திருமணம் தடையாக இருக்கும் என எண்ணிய ஔவை, விநாயகப் பெருமானை பூஜித்து இளம் வயதிலேயே முதுமை பெற்றது தெரிந்திருக்கும். அதற்கு நேரெதிராக விளங்குகிறது மேற்படி நிகழ்ச்சி. ஆனால் இங்கேயும் பக்தி, தொண்டு ஆகியவை மட்டுமல்ல.. திசை மாற்றமில்லாத தீவிர எண்ணங்கள் தான் அற்புதங்களை அரங்கேற்றின.

About The Author