• வேதாத்ரி மகரிஷி

எப்பேர்ப்பட்ட கவலையும் இந்த நான்கு வகைகளில்தான் வரும். இதில் சொல்லியிருப்பதுபோல உங்கள் கவலையை இனம் பிரித்துக் கையாண்டால், அந்தக் கவலையிலிருந்து நீங்கள் வெகு எளிதாக விடுபட்டுவிட முடியும்!

தன்னாலோ, பிறராலோ உருவான சிக்கலை எதிர்கொள்வது எப்படி? இந்தக் கவலையிலிருந்து விடுபடுவது எப்படி? பெரும்பாலான மக்களை ஆட்டிப் படைக்கும் பிரச்னை இது! எளிதாக இதைக் கையாளும் நுட்பத்தைக் கற்றுத் தருகிறார் வேதாத்ரி மகரிஷி.
‘‘முதலில், சிக்கல்களைக் கண்டு மிரளக் கூடாது. கவலையாக உருவாகி நிற்கிற இந்த சிக்கல் ஏன் வந்தது? அதற்கு யார் காரணம்? இந்த சிக்கலின் தன்மை என்ன? இந்த சிக்கலால் நமக்கு என்ன கஷ்டம் வர இருக்கிறது? இதையெல்லாம் நாம் ஆராய்ந்தாக வேண்டும். அதற்கு கவலைகளை நான்கு வகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1. அனுபவித்தே தீர்த்தாக வேண்டியவை:
ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு, இளம்பிள்ளை வாதம் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். வந்தது வந்தது தான். இந்த சிக்கலை நினைத்துக் கவலைப்படுவதால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை. தைரியமாக, அமைதியான மனதோடு கஷ்டங்களை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி.
இப்படி செய்வதன் மூலம்தான் இந்த சிக்கலினால் வரும் நஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். அதேபோல், திடீர் மரணம், இயற்கைச் சீற்றங்கள் போன்ற நம் கட்டுப்பாட்டை மீறிய செயல்களை கடவுளின் சித்தம் என்று புரிந்துகொண்டு அமைதியாகி விடுவதுதான் புத்திசாலித்தனம்!
2. தள்ளிப்போட வேண்டியவை:
சிலவகைக் கவலைகள் தீர்க்கப்பட வேண்டியவையே ஆயினும், அவற்றை இப்போதே தீர்க்கமுடியாத ஒரு நிலை இருக்கும். அவற்றைத் தள்ளிப் போட்டு, காலம் நேரம் வரும்போது எளிதாகத் தீர்த்து விடலாம். ‘இல்லை, இப்போதே தீர்த்தாக வேண்டும்’ என்று ஆரம்பித்தால், பின்னால் ஏற்பட இருக்கும் நன்மைகள் கெட்டுப் போகும். அதோடு, வேறுபல துன்பங்களுக்கு அது பிறப்பிட மாகவும் ஆகிவிடும்.
உதாரணத்துக்கு, வீட்டில் பெண்ணுக்கு திருமணப் பருவம் கடந்துகொண்டிருக்கும். தாயார், தந்தையைப் பார்த்து ‘சும்மா இருக்கிறீர்களே!’ என்று ஓயாமல் புலம்பிக்கொண்டே இருப்பார். தந்தை என்ன செய்வார்? அவர் ஒருவரால் சாத்தியமாகிவிடக் கூடிய செயலா அது? நேரமும் ஒன்றுகூட வேண்டாமா?  இடை யில் வருத்தப்பட்டுப் பயனில்லை. பொறுமையாகக் காத்திருக்கத் தான் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வேதனையும், துயரமும்தான் மிஞ்சும்!
3. அலட்சியப்படுத்திவிட வேண்டியவை:
சிலவகைத் துன்பங்களைப் பற்றிக் கவலையே கொள்ளக் கூடாது. அலட்சியம் செய்துவிட வேண்டும். சிக்கலான ஒரு நிலை இல்லாதது போலவே பாவித்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் வயதான பெரியவர்கள் சிலர், எடுத்ததற்கு எல்லாம் ஏதாவது ஒரு குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். சில இடங்களில் பக்கத்து வீட்டுக்காரர் எந்நேரமும் திட்டிக் கொண்டும், வம்புக்கு இழுத்துக் கொண்டும் இருப்பார். அப்போது என்ன செய்வது? கண்டு கொள்ளாமல் விடவேண்டியது தான். அவர்களும் ஒரு கட்டத் துக்குப் பிறகு ‘நம் காது செவிடு’ என்பதுபோல் தானாகவே ஓய்ந்து விடுவார்கள்.
இந்த லாபத்தை எந்த வழியிலும் அடைய முடியாது. இப்படி கண்டுகொள்ளாமல் நாம் நம் போக்கில் வேலைகளை கவனிக்கவேண்டியதுதான் நஷ்டமில்லாத ஒரே வழி!
4. உடனடியாகத் தீர்க்க வேண்டியவை:
இந்த வகைச் சிக்கல்களை உடனடியாகத் தீர்த்தாக வேண்டும். பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு அசலுக்கு மேல் வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால், இதை உடனே தீர்த்தாக வேண்டும். ஒரு லட்ச ரூபாய்க்கு சொத்து இருக்கிறது என்றால், அதில் ஒரு பகுதியை விற்று கடனை அடைக்கவேண்டியது தான். ‘வாங்கிய சொத்தை விற்கலாமா?’ என்று கௌரவம் பார்த்தால், சிக்கல் சிக்கலாகவே இருக்கும்.
சிக்கலை தெளிவாக ஆராய்ந்து, அதன் இயல்பும் தன்மையும் உணர்ந்து மேற்கண்ட நான்கு வகைகளில் எந்த ஒன்றில் சரியாக வருகிறதென்று நிதானமாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். மாற்றிப் பிரித்துப் போட்டால் தவறாகி விடும்.
உடனடியாகத் தீர்க்க வேண்டிய சிக்கலைத் தள்ளிப் போடக் கூடாது; தள்ளிப் போட வேண்டிய சிக்கலை ஒரேயடியாக அலட்சியம் செய்துவிடக் கூடாது; அலட்சியம் செய்ய வேண்டிய சிக்கலையும் வேறு ஒரு வகையில் சேர்த்துவிடக் கூடாது. சிக்கலை தவறாக இனம் பிரித்தால், அது புது சிக்கலை உண்டாக்கிவிடும்.
கவலை வேறு; பொறுப்பு உணர்ச்சி வேறு. கவலைப்படக் கூடாது என்பதற்காக, வந்து விட்ட சிக்கலை மறந்துவிடக் கூடாது. சிக்கலை ஏற்றுக்கொண்டு, எதிர்கொள்வதை விட்டுவிட்டு, புலம்புவதாலோ, ‘இனி என்ன செய்வேன்?’ என விரக்தி அடைவதாலோ என்ன பயன்?
விரும்பியதை அடைந்து விட்டால் கவலைகள் தீர்ந்து விடும் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மை என்ன? எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ, அங்கேயே இன்னொன்று தோன்றிவிடுகிறது. இதுதான் இயல்பு.
கவலைப்படுவதால் சிக்கலின் தன்மையைக் கணிக்க முடியாமல் போகும். சிக்கல் பெரிதாகத் தோன்றும். சிக்கலை அதன் நுட்பம் தெரிந்து அவிழ்க்கும் திறமை குறைந்துபோகும். ஆதலால், கவலைப்பட்டு ஆவது எதுவுமில்லை.
எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இறைவனிடம்தான் உண்டு. ஒவ்வொரு சிக்கலையும் எதிர்கொள்வது தேர்ந்த அறிவினாலும், பக்குவத்திலும் மட்டுமே முடியும். அந்த அறிவையும், பக்குவத்தையும் இறைவன் எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் வழங்கியுள்ளான். அதைக் கண்டுபிடித்து, அதைத் தூண்டி அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும்.

About The Author