எந்தவொரு பூஜையானாலும், காணிக்கையானாலும் குலதெய்வத்துக்கு முதல் பங்கு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் குலதெய்வத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்? எப்படி வந்தது இந்தப் பழக்கம்? விளக்குகிறார் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ தாமோதர தீட்சிதர்..

ந்து மதத்தைப் பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பத் துக்கும் ஒரு பிரத்யேகக் கடவுள் குலதெய்வமாக இருக்கிறது. ‘எல்லா தெய்வமும் ஒண்ணுதான். இதுல குலதெய்வத்தை கும்பிட்டா மட்டும்தான் பலன் கிடைக்குமா? பரிகார ஸ்தலங்கள், சக்தி ஸ்தலங்கள்ல எல்லாம் எவ்வளவு பேர் வழிபடுறாங்க? அந்த தெய்வங்களுக்கெல்லாம் சக்தி இல்லையா?’ – இந்த மாதிரி கேள்விகளை நிறைய பேர் கேட்குறாங்க.

முதலில் குலதெய்வ வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஏறத்தாழ 400, 500 வருஷங்களுக்கு முன்னர் நம்முடைய மூதாதையர்கள் ஏதேனும் ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்திருப்பார்கள். அவர்களுடைய வாழ்வில் அந்த தெய்வம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் இருப்பை உணர்த்தியிருக்கும். தானே அவர்தம் சந்ததியை முன்னின்று காப்பதாக வாக்கு கொடுத்திருக்கும். முன்னோர்களும் அந்த தெய்வத்துக்கு பூசைகள் செய்தோ.. ஆடு, கோழி முதலியன பலியிட்டோ (அவரவர் விரும்பிய படி) தாமும் தம் சந்ததியும் பரம்பரையாக வழிபடுவதாக சத்தியம் செய்து கொடுத்திருப்பார்கள். இதன்படி தொடர ஆரம்பித்தது தான் குலதெய்வ வழிபாடு!

எனவே, இது வழிவழியாக நம் மூதாதையர்களால் இஷ்ட தெய்வமாக, குலதெய்வமாக பூஜிக்கப்பட்டதால் நாமும் அந்த தெய்வத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் ஆகிறோம்.

அதற்காக மற்ற தெய்வங்களை வழிபடக்கூடாது என்றில்லை. இஷ்ட தெய்வங்களாக எத்தனை வேண்டுமானாலும் நமக்கு இருக்கலாம். ஆனால், முதல் மரியாதை குலதெய்வத்துக்கானதாக இருக்க வேண்டும். குலதெய்வத்துக்கு எதையும் செய்யாமல் இஷ்ட தெய்வத்துக்கு எத்தனை பூஜைகள் செய்தாலும், அதை அந்த இஷ்ட தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது. குலதெய்வ அருளும் இல்லாமல் இரண்டுங் கெட்டான் நிலை ஆகிவிடும் நமக்கு.

வீட்டில் நம் தாயார் நல்ல துணிமணி இல்லாமல் இருக்கும்போது, காமாட்சி அம்மனுக்கு பட்டுப் புடவை சாத்துறோம்னு வச்சுக்குவோம். அதை காமாட்சி ஏத்துக்குவாளோ? மாட்டாள், இல்லையா? அந்த மாதிரிதான் நம் குலதெய்வத்துக்கு செய்யாமல் மற்ற தெய்வங்களுக்கு செய்யும் கைங்கர்யங்களும் ஏற்கப்படாது. சில சமயம் எல்லாக் காரியங்களும் நடக்குற மாதிரி தெரியும். ஆனா, பலன் கிடைக்காது. பலன் தரவல்லது குலதெய்வமே!

வெளியூர்ல இருக்கறதால அடிக்கடி குலதெய்வத் துக்குப் போக முடியலைங்கிறது பல பேரோட கவலை. அந்தக் கவலையைப் போக்க ஒரு வழி இருக்கு. வீட்டுல குலதெய்வத்துக்கு ஒரு உண்டியல் வச்சு, தினம் சில்லறைக் காசை அதுல போட்டு வையுங்க. வருஷத்துல ஒரு நாள் அந்த உண்டியல் காசை எடுத்து குலதெய்வத்துக்கு அபிஷேகமோ படையலோ போடலாம். இது ஏன் என்றால், தினமும் நாம் காசு போடும்போது மனசுல அந்த தெய்வத்தை நினைச்சுக்குவோம். அந்த நினைப்பு தான் வழிபாடு. காசு போடுறது விஷயமில்லை. அப்போ, நாம தினமும் நம் குலதெய்வத்தை நம்மை அறியாமலே கும்பிடுகிறோம். இது நமக்கு நல்ல பலனைத் தரும்!

அவரவர் தொழில், வாழ்க்கை முறை, இருப்பிடம், பழக்க வழக்கம் சார்ந்தே குலதெய்வமும் அமைந்தி ருக்கும். பொதுவாக காவல் தெய்வங்கள்தான் குலதெய்வமாக இருக்கும். சாஸ்தா, முனீஸ்வரன், பேச்சி, கருப்பு இப்படி.. இவை அனைத்தும் காவல் தெய்வங்கள். ஒரு மனிதன் உண்ணும் உணவு, பேசும் வார்த்தை, எண்ணும் எண்ணம், வழிபடும் கடவுள் அனைத்திலும் சாத்வீக, தாமஸ, ராட்சஸ குணங்கள் அடங்கியிருக்கும். குலதெய்வங்கள் பெரும்பாலும் உக்கிரத் தன்மை வாய்ந்ததால், சாத்வீகத் தன்மை கொண்ட வேறு ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபடலாம்.

ஏதாவது காரணங்களால இடையில ஒரு தலைமுறை குலதெய்வ வழிபாட்டை மறந்துட்டா, அடுத்து வர்ற பிள்ளைகளுக்கு குலதெய்வம் எதுன்னே தெரியாமப் போயிடும். அவரவர் ஜாதகத்தை வச்சு குறி கேட்டோ, ப்ரசன்னம் பார்த்தோ குலதெய்வத்தை தெரிஞ்சுக்கலாம். இப்படிப்பட்ட நிலைமை வராம இருக்கத்தான், பிறக்கிற குழந்தைகளுக்கு குலதெய்வப் பெயர் சூட்டுறதை வழக்கமா வச்சிருந்தாங்க நம் பாட்டனார்கள். மாடர்னாக இருப்பதாக நினைத்து வாயில் நுழையாத பெயரை எல்லாம் குழந்தைகளுக்குச் சூட்டி, இப்போது குலதெய்வம் எதுவென்று தெரியாமல் நிற்கிறோம்.’’

மனம் நிறையப் பிரியத்தோடு, தன் பேரப் பிள்ளைகள் எப்போது வருமென்று கண்கள் இடுங்கக் காத்திருக்கும் தாத்தா பாட்டி மாதிரி, நம் வருகைக்காக எங்கோ காத்திருக்கிறார்கள் சுடலை மாடனும், முனீஸ்வரனும், அங்காளம்மனும், அய்யனாரும். நேரில் சென்று மனங்குளிர வழிபடுவோம், வளம் பெறுவோம்.

– கவிதா விஜயகுமார்

About The Author