• பொன்ராஜ்

திரும்பும் திசையெல்லாம் பழமையின் எழில் குலையாத கற்கோயில்கள்.. சிற்பங்கள் நிரம்பி வழியும் கோயில் பிரகாரங்கள்.. கலைநயமிக்க கட்டடங்கள்.. நாகரிகத்தின் கறைபடாத துங்கபத்ரா ஆறு.. இதுதான் ஹம்பி!
கர்நாடக மாநிலத்தில் விஜயநகர பேரரசின்  கலாசார அடையாளமாக திகழும் ஹம்பி, 25 கிலோ மீட்டர்  பரப்பளவில் துங்கபத்ரா ஆற்றின் மடியில் விரிந்து பரந்து கிடக்கிறது. சில நாட்கள் இங்கே இருந்தாலே கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் உலாவிவிட்டு வந்த உணர்வைத் தருவதுதான் ஹம்பியின் தனிச்சிறப்பு.
வழக்கமான மற்ற சுற்றுலாத் தளங்களைபோல் இங்கே சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களை விரல்விட்டு எண்ணிவிட முடியாது. காரணம், மொத்தமுள்ள 25 கி.மீ. பரப்பளவுமே அழிந்துபோன விஜயநகரத்தின் 500-க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது.
கி.பி. 14-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ம் நூற்றாண்டு வரை விஜயநகர பேரரசின் தலைநகராக ஹம்பி (அன்றைய விஜயநகரம்) இருந்ததால் பெரும்பாலான கோயில்களும், அரண்மனைகளும் இங்கேதான் கட்டப்பட்டன. அதன்படியே இங்கே சுற்றிப்பார்க்க வேண்டியவைகளை கோயில்கள், அரண்மனை பகுதி என இரண்டாக பிரித்துக் கொள்ளலாம்.
ஹம்பியை முழுமையாக சுற்றிப் பார்க்க பேருந்து ஏதும் இயக்கப்படுவதில்லை. அதனால் சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனமே சரியான சாய்ஸ். நாள் வாடகை 30 ரூபாயில் சைக்கிளும், 200 ரூபாயில் இருசக்கர வாகனமும் இங்கே தாராளமாக கிடைக்கிறது. நம்முடைய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை கொடுத்துவிட்டால் போதும்.. உடனே சைக்கிள் அல்லது டி.வி.எஸ். 50 தருவார்கள்.
ஹம்பியின் மையத்தில் இருக்கும் விருபாக்ஷா கோயில் தான் பெரியதும் முக்கியமானதாகும். விஜயநகர மன்னர் களின் குலதெய்வக் கோயிலான இந்த விருபாக்ஷா கோயிலின் பின்பகுதியில் உள்ள அறை ஒன்றில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுவது ஓர் அதிசயக் காட்சி!
இ-ங்கே இருந்து சற்று தூரம் சைக்கிளில் சென்றால் மதுங்கா மலை வருகிறது. அதன் சரிவில் இருக்கிறது, அச்சுதராயா கோயில். இரு செவ்வக வடிவில் அமைந்துள்ள கோயிலின் முன்பாக அந்தக் கால சந்தை சிதிலமடைந்த நிலையில் கல் தூண்களாக மிஞ்சி இருக்கிறது. தொடர்ந்து மதுங்கா மலை ஏறி உச்சிக்கு சென்றால், நான்கு திசையிலும் ஹம்பியின் மொத்த அழகையும் பருந்துப் பார்வையில் ரசிக்கும் சுகானுபவம் கிடைக்கும். அதுவும் அந்தி மயங்கும் மாலை அல்லது சூரியன் விழிக்கும் அதிகாலை என்றால், ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பதாக நினைத்து சிலிர்த்துப் போவீர்கள். அந்த அளவுக்கு வளைந்து நெளிந்து ஓடும் துங்கபத்ரா ஆறும், மலைகளும், தொலைதூர கோயில்களும் உங்களை வசீகரிக்கும்.
அப்படியே மலையில் இருந்து கீழிறங்கி துங்கபத்ரா ஆற்றோரத்தை நோக்கி சென்றால், அங்கே பரிசல் ஓட்டுபவர்கள் உங்களுக் காகவே காத்திருப்பார்கள். ஆர்ப்பரிப்பின்றி அமைதியாக ஓடும் ஆற்றில் செல்லும் பரிசல் பயணத்தை, தண்ணீர் ஓடும் பாறைகளுக்கு நடுவே நிறுத்தி வைத்து திகிலூட்டி, மறக்க முடியாத அனுபவமாக்கி விடுகிறார்கள், பரிசல் ஓட்டிகள்.
அதிலிருந்து மீளாமல் அப்படியே ஆற்றங்கரை ஓரமாகவே வந்தால், விட்டலா கோயிலின் பின்புறம் மன்னர்கள் கால கல்பாலத்தின் சிதைந்த பகுதிகளை பார்க்கலாம். அகலமான துங்கபத்ரா ஆற்றின் வடக்கு கரைக்குச் செல்ல கட்டிய நீளமான பாலத்தில் அடித் தளமாக அமைக்கப்பட்ட உயர மான கல்தூண்கள் மட்டுமே இன்று காணக் கிடைக்கின்றன.
விட்டாலா கோயிலில் கல்லெல்லாம் சிற்பமாக உருமாறிக் கிடந்தாலும், நம்மை அசர வைப்பது கல்தேர்தான். கோயில் பிரகாரத்தில் தனியே அமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர் பார்ப்பதற்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக தெரிந்தா லும், உண்மையில் பல கற்களால் ஆனது. நுண்ணிய வேலைப்பாடு கொண்ட சிற்பங்களும், ஓவியங்க ளுமாக மாலை வெயிலின் தகதகப்பில் இந்தத் தேரைப் பார்த்தால் தங்கத் தேர் என்றே நினைக்கத் தோன்றும்! அதன் வடிவமைப்பில் அப்படியொரு நேர்த்தி!
சிறிதும், பெரிதுமான எண்ணற்ற கோயில்களை சுற்றிப்பார்த்து முடிப்பதற்குள் உங்களுக்கு ஒருநாள் ஓடிவிடும். இங்கே அவசியம் சொல்ல வேண்டிய ஒன்று.. ஹம்பி சுற்றுலாவுக்கு  குறைந்தது 2லிருந்து 5 நாட்கள் வரை திட்டமிடுவதுதான் முழுமையாக, நிறைவாக சுற்றிப் பார்க்க சரியாக இருக்கும்.  
ஹம்பியில் தங்கியிருப்பது உங்களது பர்ஸுக்கு எந்த வகை யிலும் பாதகமாக இருக்காது. காரணம், இங்கு வசித்து வரும் மக்கள் தங்களது வீட்டை ஒட்டியே விருந்தினர் அறைகளை கட்டி வாடகைக்கு விடுகின்றனர். 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை வாடகையில் விதவிதமாக அறைகள் கிடைக்கின்றன. மெத்தையுடன் கூடிய கட்டில், சுத்தமான கழிப்பறை, மின்விசிறி  என பட்ஜெட்டுக்கு ஏற்ற வசதி யான அறைகளாக இருக்கின்றன.
களைப்பு தீர இரவில் ஓய்வு எடுத்துவிட்டு காலையில் எழுந்து துங்கபத்ரா ஆற்றில் குளியல் போடுவது குதூகலமான ஒன்று.
இரண்டாம் நாளில் அரண்மனை மற்றும் அந்தப்புர பகுதி கட்டடங்களை காணச் செல்லலாம். அந்தப்புர பகுதியில் உள்ள தாமரையின் இதழ் விரிந்ததுபோல கட்டப் பட்டிருக்கும் தாமரை மஹால், அந்தக் கால அரசு குடும்பத்துப் பெண்களின் இல்லமாக இருந் திருக்கிறது. இதன் பின்னாலேயே அமைந்திருக்கும் யானை கட்டிப் போடும் லாயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அடுத்தடுத்து ஒட்டியபடி குவிமாடங்களுடன் கூடிய 11 லாயங்களும் இஸ்லாமிய கட்டடக் கலையை பின்பற்றி  யானையை போலவே பிரமாண்ட மாக கட்டப்பட்டவை.
இங்கே ராணுவ பயன்பாட்டுக் காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கோபுரங்களில் கூட கட்டடக் கலைஞர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டத் தவறவில்லை.
விஜயநகர பேரரசின் கட்டடக் கலையும், அதன் அறிவும் வெறும் ஆடம்பரத்துக்கு மட்டும் பயன்பட்டதல்ல என்பதை நமக்கு இன்றும் உரத்துக்கூறிக் கொண்டு இருக்கின்றன, செதுக்கப்பட்ட கற்களால் ஆன கால்வாய்கள்! துங்கபத்ரா ஆற்றில் இருந்து கோயில்களுக் கும், அரண்மனைக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் கொண்டுவர மிகவும் புத்திசாலித் தனமாக வடிவமைக்கப்பட்ட கால்வாய்கள் இவை. 400 ஆண்டு கள் கழிந்த பின்னும் ஹம்பியில் இன்றும் விவசாயத்துக்கு இந்தக் கால்வாய்கள் பல பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தான் ஆச்சர்யம்!
அரண்மனை பகுதியில் அடுத்து நம்மை கவர்வது ஐந்தடுக்குகளை கொண்ட எண்ணற்ற படிக்கட்டுகளுடன் கூடிய குளியல் குளம்! கோடு களால் தீட்டப்பட்ட அழகான ஓவியம்போல் உள்ள இந்தக் குளம், அரசு குடும்பத்தார் மத சார்பான விழாக்களின்போது பயன்படுத்தியது.
இதைப் போன்றே ராணி குளிப்பதற்கு என்று கட்டப்பட்ட, நடுவில் நீச்சல் குளத்துடன் கூடிய கட்டடத்தில் உள்ளே சென்றால்.. நாம் ஒருநாள் ராணியாக இருந்திருக்கக் கூடாதா என ஏக்கம் வரும். அவ்வளவு, அழகு அந்தக் கட்டடம்! அதற்குள் நீர் வரவும், அழுக்கு நீரை வெளியேற்றவும் அறிவுப்பூர்வமாக யோசித்து அந்தக் கால நிபுணர்கள் அமைத்துள்ள கால்வாய்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
படிக்கட்டு குளத்தை தாண்டி சென்றால் ராஜதந்திரிகளின் ரகசிய ஆலோசனைக்கூடம் உள்ள பாதாள அறையை பார்க்கலாம். மேலிருந்து பார்த்தால் ஒரு ஆள் இறங்குவதற்கு போதுமான குழி போல உள்ளது-. ஆனால், அந்தக் குழிக்குள் உள்ள படியில் இறங்கிச் சென்றால்.. ஆங்காங்கே வெளிச்சத்துடன் நான்கு சுற்று சுற்றிய பின்னால் வருகிறது & அந்த ரகசிய பாதாள அறை. திகிலும், திகைப்பும் கலந்த அனுபவத்தை தரும் இது.
ஹம்பியில் பார்க்க மறந்துவிடக் கூடாத மற்றொன்று – போஜன சாலை! சிப்பாய்கள் உணவு அருந்த அமைக்கப்பட்ட இடம்! உணவு அருந்துவதற்கான தட்டு, கூட்டு காய்கறி வைப்பதற் கான கிண்ணங்கள் அனைத்தும் இரு வரிசையில் ரெடிமேடாக கல்லிலேயே செதுக்கப்பட்டுள் ளன. விஜயநகர கட்டடக் கலைஞர்களின் ஆர்வத்துக்கு அளவில்லை என்பதற்கு இதுவே உதாரணம்.
ஹம்பி என்னும் ஒரு பானை சோற்றில் நாம் இங்கே கூறியிருப் பது ஒரு பருக்கைதான். தேடிச் செல்லச் செல்ல இன்னும் ஏராளமான இடங்களை நீங்கள் இங்கே கண்டு ரசிக்க முடியும்!

எப்படி போவது?
ஹம்பியில் ரயில் நிலையம் கிடையாது. அங்கேயிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹோஸ்பேட்தான் பக்கத்து ரயில் நிலையம். பெங்களூரில் இருந்து சுமார் 420 கி.மீ. தூரத்தில் உள்ளது ஹோஸ்பேட்.
தமிழகத்திலிருந்து ஹோஸ்பேட் செல்ல நேரடி ரயில் கிடையாது. சென்னையிலிருந்து செல்பவர்கள் முதலில் குண்டக்கல் சென்று அங்கிருந்து வேறொரு ரயில் மூலம் சுமார் 4 மணி நேர பயணத்தில் ஹோஸ்பேட்ஐ அடையலாம்.

About The Author