கூந்தலின் வேரை பலப்படுத்த, வெளியே தடவும் எண்ணெயைவிட, உள்ளுக்குள் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியமான ஒன்று. முடி உதிர்வதற்கு, சத்து குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால், சத்தான உணவு மிக அவசியம். கூந்தல் வளர்ச்சிக்கான உணவுகளை விவரிக்கிறார், இயற்கை மருத்துவ நிபுணர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.

சோயா பீன்ஸ் பல சத்துக்கள் அடங்கிய முக்கிய மான உணவு. சோயா பீன்ஸில் ‘சோயா ஈஸ்ட்ரோஜென்’ என்ற சத்து கிடைக்கிறது. இதில் புரதம் மிகுந்துள்ளது. அசைவத்துக்கு ஈடானது என்பதால், சோயா பீன்ஸை ‘ஏழைகளின் இறைச்சி’ என்றுகூட சொல்வர். சுண்டல், குருமா, குழம்பு என எல்லா வகையிலும் சோயாவைப் பயன்படுத்தலாம்.

* கறிவேப்பிலை.. கூந்தலுக்கு கருமை நிறத்தைக் கொடுப்பதுடன், அனீமியா வராமலும் பாதுகாக்கும். துவையல், கறிவேப்பிலைப் பொடி போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* காலிஃப்ளவர் இலை, அரைக் கீரை, கோங்குரா எனப்படும் புளிச்ச கீரை, முருங்கை கீரை, பசலை கீரை, கோதுமை புல் சாறு, கருப்பு எள்ளு (எள்ளு மிட்டாய், எள்ளு துவையல், எள்ளு பொடி போன்றவை), எல்லாவிதமான பயறு மற்றும் பருப்பு வகைகள், பால், கேரட், பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம், அவல், முளை விட்ட தானியங்கள், உலர் திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, கொட்டையுள்ள கருப்பு திராட்சை, அசைவம் என்றால் மீன், முட்டையின் வெள்ளைக் கரு.. இவற்றையெல்லாம் உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொண்டு வந்தாலே, ஊட்டச் சத்து குறைபாடு என்பதே இல்லாமல் போய்விடும். முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் எல்லாமே இந்த உணவுகளில் இருக்கின்றன. இவற்றை சாப்பிட ஆரம்பித்தாலே, முடி உதிர்வது குறைந்துவிடும்.

குறிப்பு: கோதுமை புல்லை நீங்களே வீட்டில் தயரிக்கலாம். முளைகட்டிய கோதுமையை ஒரு சின்ன பானையில், மண் நிரப்பி அதில் போட்டு வைத்தால், ஏழாவது நாள் புல் போல முளைத்து வரும். ஆறேழு நாட்களில் வளரும் புல்லை நறுக்கி எடுத்து அரைத்து, அந்தச் சாறைக் குடிக்கலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..
தலைமுடியின் வேருக்கான ரத்த ஓட்டம்தான் முடி ஆரோக் கியத்துக்கு மிக முக்கியம். எப்போதெல்லாம் நாம் டென்ஷன் ஆகிறோமோ, அப்போதெல்லாம் நம் விரல் நுனிகளாலேயே வேர்க் கால்களில் மசாஜ் கொடுக்கலாம். விரல் நுனியால் கோதிவிடுதல் மிக அவசியம். மென்மையான சீப்பு அல்லது பிரஷ் கொண்டு மெதுவாகக் கோதுவதுபோல வாரிக்கொண்டே இருந்தாலும், முடியின் வேர்க்கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாயும்.
தலைகுளிக்கும் தினத்தில், வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை நமது விரல் நுனி களில் தொட்டு, தலையில் மசாஜ் செய்துவிட்டு, வெதுவெதுப் பான தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துண்டு ஒன்றை தலையில் சுற்றி வைத்தாலும், தலைமுடி வேர்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

யோகப் பயிற்சி
முடி வளர்ச்சிக்கு முக்கியமான மூன்று ஆசனங்கள், விபரீதகரணி, சர்வாங்காசனம், பாதஹஸ்தாசனம் ஆகியவை. இந்த ஆசனங்களை முறையாக ஒர் ஆசிரியரிடம் கற்று, தினசரி செய்து வந்தால், தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். அதுமட்டுமல்ல; தைராய்டு பிரச்னையிலிருந்தும் விடுபடலாம். இந்த ஆசனங்களால் முடி வளரும் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

பிராணாயாமப் பயிற்சி
நாடிசுத்தி, சீதளி, சீத்காரி, பிராமரி போன்ற மூச்சுப் பயிற்சி களை, முறையாகக் கற்றுக்கொண்டு செய்து வரலாம். இவை ஹார்மோன் களை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும். ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மைதான், முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமான மன அழுத்தத்தை விரட்டியடிக்க, யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் மூன்றும் மிக அவசியம். இவை ரத்த ஓட்டம், ஹார்மோன்கள் ஆகியவற்றைச் சரிசெய்வதுடன், முகத்தில் தேஜஸை உண்டாக்கும். கண்களில் ஓர் ஒளி தெரிவதுடன், உடலில் புத்துணர்ச்சியும் உண்டாகும்.

நீங்களே தயாரிக்கலாம் நேச்சுரல் கலரிங்!
ரசாயனம் அற்ற, இயற்கை முறை கலரிங்கை நீங்களே வீட்டில் செய்துகொள்ளலாம். பிளாக் டீ எனப்படும் டீ டிகாக்ஷனை சுத்தமான தேயிலையை வாங்கி, தயாரித்துக் கொள்ளவும். தண்ணீரில் டீத்தூளை ஊறப் போட்டால்கூட அந்த நிறம் அப்படியே இறங்கிவிடும். அதைத் தலையில் தடவி வைத்திருந்து, 10, 15 நிமிடம் கழித்து அலசலாம். காபி டிகாக்ஷனையும் இதேபோல் தடவிக் கொள்ளலாம்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தை வாங்கி, தண்ணீரில் கலந்து குழைத்து, தலை யில் ‘பேக்’ போல போட்டுக் கொள்வது இன்னொரு வழி.
ஹென்னா எனப்படும் மருதாணி இலையை அரைத்தும் ‘பேக்’ போடலாம். ஆனால், இது குளிர்ச்சியானது. இவை எல்லாமே முடிக்கு பழுப்பு நிறம் கொடுக்கும்.
கருப்பு நிறம் வேண்டும் என்பவர்கள், ‘பிளாக் வால்நட்’ எனப்படும் பருப்பை வாங்கி, அரைத்து, விழுதாக்கி தலையில் தடவலாம். முடிக்கு கருப்பு நிறம் கொடுக்கும். ஆனால், இது விலை அதிகம்.

சிவப்பு நிறம் வேண்டும் என்பவர்கள், தக்காளியை அரைத்து அந்த விழுதைத் தடவி வைத்திருந்து அலசலாம். செம்பருத்திப் பூ அரைத்த விழுதைத் தடவினாலும் செம்மை கலந்த பழுப்பு நிறம் வரும்.

வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் தைலம்
சுத்தமான தேங்காய் எண்ணெய்தான், வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய கூந்தல் தைலத்துக்கு அடிப்படை!
தேவையான பொருட்கள்: சுத்தமான தேங்காய் எண்ணெய் & 250 மி.லி, மருதாணி இலைகள் – 2 கைப்பிடி அளவு, செம்பருத்தி பூக்கள் – 25 (அ) 30, பெரிய நெல்லிக்காய் – 5, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை – 3 கைப்பிடி, கறிவேப்பிலை – 2 கைப்பிடி, அவுரி இலை – ஒரு கைப்பிடி அளவு (கிடைத்தால் சேர்க்கலாம். இது முடிக்கு நல்ல கருப்புத் தன்மையைக் கொடுக்கக் கூடியது), நாட்டு மருந்துக் கடையில் கிடைத்தால் பொடுதலை என்னும் இலை சிறிதளவு.
செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக விழுதாக அரைத்துக்கொள்ளவும். அவற்றை வடை போல தட்டி, நிழலில் உலர்த்தவும். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு, லேசாகச் சுட வைத்தால் போதும். தளதளவென கொதிக்க வேண்டாம். இளஞ்சூடான பின்பு, அப்படியே இறக்கி தனியே வைக்கவும். ஒரு வாரம் அப்படியே இருந்தால், மூலிகைகளில் இருக்கும் சத்து இறங்கி, எண்ணெயின் நிறமே மாறிவிடும். அதன் பிறகு அதை வடிகட்டி, நீல நிற குடுவையில் ஊற்றி வைக்கலாம்.
பலன்: தினந்தோறும் அதைத் தேய்த்து வந்தால், ஒரு மண்டலத்திலேயே இதனுடைய பலனை நன்கு கண்கூடாகப் பார்க்கலாம். ஈறு, பேன், பொடுகு போன்ற பிரச்னைகள் நீங்கிவிடும். மீண்டும் வரவே வராது. முடியின் வேருக்கு பலம் கிடைத்து, உதிர்வது நின்று, நன்கு கருகருவென வளரும்.

About The Author