• டாக்டர் செல்வ சண்முகம்

எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒரு மூலிகை தூதுவளை. தமிழகத்தில் பரவலாக வளரக் கூடிய இம் மூலிகை, முட்கள் நிறைந்திருக்கும் தாவரம். முட்களை கவனமாக நீக்கி விட்டுப் பயன்படுத்த வேண்டும். இந்தச் செடியில் இருக்கும் இலை, பூ, காய் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை.

பெயர்க் காரணம்:
ஒவ்வொரு மூலிகையுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பாகச் செயல்படும் தன்மை கொண்டது. சிறுபொழுதுக்கும் (காலை, நண்பகல், மாலை போன்றவை), பெரும்பொழுதுக்கும் (மழைக் காலம், பனிக்காலம் போன்றவை) இது பொருந்தும். அந்த வகையிலேயே தூது செல்லும் வேளையில் இந்த மூலிகையின் பலன் அதிகமாக இருப்பதால் இதற்கு ‘தூதுவேளை’ என்ற பெயர் வந்தது. அதாவது, தலைவன் தலைவிக்கோ, மன்னர்கள் தூது அனுப்புவ தற்கோ ஏற்ற வேளை என்பது, அதிகாலையில் சூரிய ஒளி லேசாக வர ஆரம்பிக்கும்போதும் சூரிய ஒளி முழுவதுமாக மறைந்து இருள் வரத்தொடங்கும் நேரமும் ஆகும். குறிப்பாக இந்த வேளையில் இந்த மூலிகையை மருந்தாகவோ உணவாகவோ செய்து சாப்பிடும்போது, அது மிகுந்த பலன் கொடுக்கும். தூதுவளையில் தொகையல், ரசம், சூப், அடை, மசியல் போன்றவற்றைச் செய்து சாப்பிடுவது தமிழர்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

சாப்பிடும் முறையும் பலன்களும்:
சித்தர்கள் தங்கள் நூல்களில், சளி, இருமல், இரைப்பு இருமல் (ஆஸ்துமா), தும்மல், மூக்கடைப்பு, தோல் தடிப்பு, வயிற்று மந்தம், உடல்வலி, மூட்டு வாதம், மனப்பதற்றம், குழப்பம் ஆகிய பிரச்னைகளை நீக்கி உடலை வலுவாக்கும் தூதுவளை என்று பாடியுள்ளனர். இது ஆண்மையை பெருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரைப்பு இருமல் (பிராங்க்கியல் ஆஸ்துமா) குறைய..
பொதுவாக தலைபாரம், மூக்கடைப்பு, இரைப்பு (ஆஸ்துமா), தோல் அரிப்பு போன்றவை மரபுவழி ஒவ்வாமையால் ஏற்படுகிறது. மரபுவழி ஒவ்வாமையை கட்டுப்படுத்தும் ஆற்றல் தூதுவளைக்கு இருப்ப தாக இக்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுத்தம் செய்யப் பட்ட தூதுவளை ஒரு கைப்பிடி, ஒன்றிரண்டாக இடித்த திப்பிலி ஒரு தேக்கரண்டி, வெற்றிலை 2, துளசி இலை 5.. இவை எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக இடித்து, 250 மிலி தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு 50 மில்லியாக வரும்வரை காய்ச்சி வடிகட்டி, காலையிலும் மாலை யிலும் பயன்படுத்த வேண்டும்.
மரபுவழி ஒவ்வாமை நீங்க வேண்டுமெனில், உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் சரியாக இருக்கவேண்டும். இரைப்பு இருமல் இருப்பவர்கள் அதிகாலை துயில் எழுவதும், குளிர்ந்த நீரில் குளிப்பதும் அவசியம். மிளகு, இஞ்சி, சீரகம், மஞ்சள், மொட்டு நீக்கிய கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பசும் நெய் மிகவும் சிறந்தது.

மூளையின் ஆற்றல் மேம்பட..
மனப் பதற்றம் நீங்கி, மனச்சோர்வும் நீங்கி தெளிவாக முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் ஆற்றல் தூதுவளைக்கு உண்டு. இன்றைய இளைஞர்கள் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மூலிகை தூதுவளை.
100 கிராம் தூதுவளை இலையை சின்னச் சின்னதாக வெட்டி, 200 கிராம் நெய்யுடன் கலந்து அடுப்பிலிட்டு, மெலிதான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும். தூதுவளையின் சத்து முழுவதும் நெய்க்கு வந்த பின்பாக (அதாவது சலசலப்பு அடங்கிய நிலை) வடிகட்டவும். அதில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய பொடிகளை வகைக்கு ஒரு தேக்கரண்டி கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நெய்யை காலை, மாலை உணவுக்கு 30 நிமிடங்கள் முன்பாக ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் பெருகும். சளி, இருமல் தொல்லைகள் வராமல் தடுக்கும். காசநோயாளிகள், அந்த நோய்க்கான மருத்துவம் மேற் கொள்ளும்போது இந்த நெய் மருந்தை இரண்டு வேளை பருகி வந்தால், நோய் வேகமாக நீங்குவ தோடு, உடல் வலு உண்டாகும்.

புற்றுநோயைத் தடுக்க..
இக்காலத்தில் தவறான பழக்கவழக்கங்கள் இல்லாதவர் களுக்குக்கூட புற்றுநோய் வருகிறது. சாப்பிடும் உணவிலும் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களிலும் உள்ள நச்சு வேதிப்பொருள்களே இதற்கு முக்கிய காரணியாக அமைகிறது. எனவே, இந்த நச்சுப் பொருட் களை நீக்குவதற்கும், உடலை வலுப்படுத்துவதற்கும் சித்தர்கள் கூறியிருக்கும் மூலிகைகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
தூதுவளை இலை ஒரு பங்கு, கரிசலாங்கண்ணி இலை, பொன்னாங்கண்ணி இலை, முசுமுசுக்கை இலை, வல்லாரை.. இவை எல்லாவற்றையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து, மொத்த அளவில் எட்டில் ஒரு பங்கு மிளகுப்பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். இப்பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து, தேனில் குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
இதுபோல தொடர்ச்சியாக வருடத்தில் மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும். இது புற்று நோய் மட்டுமன்றி, இக்காலத்தில் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய பல நோய்களைத் தடுக்கும் ஆற்றலை உடலுக்குக் கொடுக்கிறது
.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த..
இக்காலத்தில் பல ஆய்வுகள் தூதுவளைக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயின் நாள்பட்ட பின்விளைவுகளான கண் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவற்றைத் தடுப்பதிலும் தூதுவளை பயன்படுகிறது.
தூதுவளை ஒரு பங்கு (100 கிராம்), வில்வ இலை 2 பங்கு (200 கிராம்) எடுத்துக் கொள்ளவும். நிழலில் இரண்டை யும் காய வைத்து பொடிசெய்து, வெந்தயம் 10 கிராம், மஞ்சள், சீரகம், மிளகு மூன்றும் தலா
10 கிராம் பொடி செய்து மொத்தமாக எல்லா பொடிகளை யும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாக இளம் சூடுள்ள வெந்நீரில் இந்தப் பொடியைக் கலந்து பருக வேண்டும். சர்க்கரை நோய்க்கான வேறு எந்த மருந்து எடுத்துக் கொண்டாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப் படி மருந்துகளின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

கல்லீரலை பலப்படுத்த..
போதை பொருட்களாலோ, புகைப் பழக்கத்தாலோ அல்லது தவறான உணவுப் பழக்கத்தாலோ கல்லீரல் பாதிப்படைகிறது. நாள்பட்ட நிலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. இதனைத் தடுப்பதற்கு தூதுவளை பெரும் உதவியாக இருக்கும். கல்லீரலை பலப்படுத்த தூதுவளையில் ரசம் செய்து சாப்பிடலாம்.

தூதுவளை ரசம் (சூப்) தயாரிக்கும் முறை..
சீரகம், சின்னவெங்காயம், மஞ்சள், நாட்டு தக்காளி ஆகியவற்றை நன்கு வதக்கவும். தூதுவளையை சிறு துண்டுகளாக வெட்டி அதையும் சேர்த்து வதக்கி, இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து தினமும் பருக வேண்டும்.

மார்புச்சளி, இருமல், தும்மல் நீங்க..
தூதுவளை இலைகளை முட்களை நீக்கிவிட்டு சுத்தமாக கழுவி, நிழலில் காயவைத்து, பொடி செய்து கொள்ளவும். இலையின் அளவில் எட்டில் ஒரு பங்கு மிளகு பொடி சேர்த்து, காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து, சுவைத்துச் சாப்பிடவேண்டும். கட்டுரையின் தொடக்கத்தில் கூறியபடி இதை அதிகாலையிலும் மாலையிலும் சாப்பிடவேண்டும். இதைச் சாப்பிடும்போது பால், தயிர், கிழங்கு, கோதுமை, வெள்ளை சீனி, பொடி உப்பு, புளி போன்றவற்றை உணவிலிருந்து நீக்கிவிட வேண்டும்.
பொதுவாக இவை எல்லோரும் நீக்க வேண்டிய பொருட்களாக இருந்தாலும், சளித்தொல்லை உள்ளவர்கள் அறவே நீக்க வேண்டும். மூக்கில் நீர் வடிதல், கண் சிவத்தல், கண்ணீர் வடிதல் போன்றவை இருந்தால், நீர்க்கோவை மாத்திரையை (சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இழைத்து நெற்றியில் பற்றுப் போடவேண்டும். ஆவி பிடித்தலும் நல்ல பலனைத் தரும்.

தூதுவளை ரசம்
தேவையானவை: தூதுவளை இலை – ஒரு கைப்பிடி அளவு, மிளகு – ஒரு தேக்கரண்டி, சீரகம், கொத்தமல்லி விதை – தலா ஒரு தேக்கரண்டி, கொடம்புளிச் சாறு – நான்கு தேக்கரண்டி, நாட்டுத் தக்காளி & 1, கொத்த மல்லித் தழை – சிறிதளவு, நெய் & 2 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள் & கால் தேக்கரண்டி, பெருங்காயத் தூள் & கால் தேக்கரண்டி.
செய்முறை: தூதுவளையை சின்னத் துண்டுகளாக வெட்டி, கொஞ்சம் நீர் விட்டு அரைத்து வைக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகு, சீரகம், தனியா பொடிகளை புளிச்சாற்றில் கலந்துகொள்ளவும் பெருங்காயப் பொடியையும் சேர்த்து, எல்லாவற்றையும் கொதிக்கவிட்டு, கடைசியாக நாட்டுத்தக்காளியை நறுக்கிப் போட வேண்டும். அரைத்து வைத்த தூதுவளை சாற்றை கடைசியாக சேர்த்து, லேசாகக் கொதிக்கவிட்டு மல்லித்தழை சேர்த்து, மிளகு சீரகப் பொடி தூவவும். நெய்யை விட்டு இறக்க வேண்டும்.

கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மாணவர்களை மூலிகைச் செடிகளை வளர்க்க ஆயத்தப்படுத்த வேண்டும். மூலிகைகளின் வீட்டு மருத்துவ குறிப்புகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். எளிமையாக தாராளமாகப் பயன்படுத்துவதற்கு அது வழியாக அமையும். நலமான சமுதாயம் உருவாவதற்கு இது அடிப்படையாக அமையும்.
ஏனெனில், மருத்துவமனைக்கு வரும் இந்தக் கால இளைஞர்களிடம் ஒரு குறிப்பிட்ட மூலிகையைச் சொல்லி, அதை உணவில் சேர்த்துக் கொள்ளச் சொன்னால், ‘‘இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாதா?’’ என்று கேட்கிறார்கள். வாயில் நுழையாத பெயருடைய உணவுகளை கேள்வி கேட்காமல் உண்ணும் இளைஞன், பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வந்த மூலிகைகளை பயன்படுத்துவதற்கு பல கேள்விகளைக் கேட்கிறான். இதைத் தவிர்ப்பதற்கு மாணவர்களிடையே மூலிகையின் பயன்பாட்டை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.

தொகுப்பு: பிரேமா நாராயணன்

About The Author