தாம்பத்யத்தின் அருமையையும், பெருமையையும் புரியவைக்கும் எந்த நிகழ்வும் நடந்திராதபோது, மனம் பிரிவை நாடலாம். அப்படி விவாகரத்து கோரும் கணவனுக்கு இழந்த உறவின் அருமையை உணர்த்தி, திருத்திய மனைவியைத்தான் இங்கே காணப் போகிறீர்கள். இது ஒரு கணவனின் வாக்குமூலம்!

ந்த நாள் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.திருமணம் முடிந்து மாலையும், கழுத்துமாக காரில் வீடு திரும்புகிறோம் நானும், என் மனைவி அகல்யாவும். காரிலிருந்து இறங்கும் அகல்யா, வீட்டிற்குள் தன்னை தூக்கிச் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். நானும் தரையில் அவள் கால் படாது தூக்கிக்கொண்டு சந்தோஷமாக வீட்டின் படியேறுகிறேன். வெட்கத்தில் சிவந்துபோகிறது அவள் முகம்.

பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கதை இது.
தொடர்ந்து வந்த நாட்களில் தெளிந்த நீரோடை போல நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை. எல்லாம் ரேணுகா என் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் வரைதான்.

அன்று.. ரேணுகாவிற்காக நான் பரிசளித்த புதிய வீட்டின் பால்கனியில் நின்றிருந்தேன். என்னை பின்புறமாக வந்து கட்டி அணைத்துக் கொண்ட ரேணுகா சொன்னாள்.. ‘‘தினேஷ், உன்னைப் பார்த்துவிட்டால் எந்தப் பெண்ணுக்கும் பிடிக்காமல் போகாது!’’

ரேணுகாவின் வார்த்தைகள் உடனே என் மனைவி அகல்யாவை எனக்கு ஞாபகப்படுத்தின. திருமணமான புதிதில் என் மனைவி சொன்ன அதே வார்த்தைகள்! எனக்கு நெருடலாக இருந்தது. என் மனைவியையும், குழந்தையையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என உறுத்தலாகவும் இருந்தது. ஆனால், வேறு வழியில்லை.
அந்த நேரத்தில் அகல்யாவுடன் இனியும் தொடர்ந்து வாழ்க்கை நடத்துவது இயலாத காரியம் என புரிந்தது. அதேநேரம் அவளிடம் விவாகரத்து குறித்து பேசுவதும் என்னால் முடியவே முடியாது.

நான் எதைக் காரணம் காட்டி அகல்யாவை விவாகரத்து செய்வதாக கூறுவது? அவள் இதுவரை ஒரு நல்ல மனைவியாகவே இருந்து வந்திருக்கிறாள். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டை, சச்சரவு என கண் கலங்கியதும் இல்லை. எங்கள் பிரிவுக்கு என்னால் எந்தவித காரணத்தையும் கூறவே முடியாது. ஏதோ ஒரு வெறுமை ரேணுகாவின் மேல் என்னை பிரியம் கொள்ள வைத்தது. இப்போது அவளையே மணம் கொள்ளத் துடிக்கிறது.

இதை எப்படி தாங்கிக் கொள்வாள் அகல்யா?

விளையாட்டுத்தனமாக ஒருநாள் கேட்டேன், ‘‘நாம் விவாகரத்து செய்துகொண்டால், நீ என்ன செய்வாய் அகல்யா?’’

அவள் என்னை முறைத்தாள். ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அதையே என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அவளைப் பொறுத்தவரையில் அது நினைத்துகூடப் பார்க்க முடியாத விஷயம்!

ஒருநாள், அகல்யா என் அலுவலகத்துக்கு வந்த நேரம்.. அதற்கு சற்று முன்தான் ரேணுகா வந்து சென்றிருந்தாள். அலுவலக ஊழியர்கள் எலலோருமே அகல்யாவை பரிதாபமாகவே பார்த்தார்கள். அவர்களின் பேச்சும் எதையோ மறைப்பதுபோல இருந்ததை அவள் உணர்ந்துகொண்டாள். புன்னகையோடு அவள் பேசிச் சென்றாலும், கண்களில் ஏதோ வலி இருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.

அன்று இரவு அகல்யா எனக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது அவளது கையைப் பற்றினேன். “நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் அகல்யா..” என்றேன். எதுவும் கேட்காமல் அமைதியாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவள் கண்களில் மீண்டும் வலியை உணர்ந்தேன். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. அவளை விவாகரத்து செய்ய விரும்புவதாக அமைதியாக கூறினேன். பதற்றப் படாமல் ‘‘ஏன்?’’ என்று கேட்டாள்.

நான் என்ன காரணம் சொல்வது? அமைதியாக இருந்தேன். என் அமைதி அவளது கோபத்தை கிளறிவிட, சாப்பிட்ட தட்டை வீசி எறிந்தாள். ‘‘நீயெல்லாம் ஒரு மனுஷனா?’’ என கத்தினாள்.

அன்று இரவு நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. அவள் விம்மி, விம்மி அழுதுகொண்டே இருந்தாள்.

எங்கள் திருமண வாழ்க்கையில் என்ன தப்பு நடந்தது என அவளுக்கு தெரிந்தாக வேண்டும். என் மனம் ரேணுகா வசம் போய்விட்டதை எப்படியாகினும் அவளிடம் சொல்லியே ஆகவேண்டும்.

குற்றஉணர்ச்சியுடனே நான் விவாகரத்து பத்திரத்தை தயாரித்தேன். எங்களின் வீடு, கார், கம்பெனியின் 30 சதவீத பங்கை அகல்யாவுக்கும், போர்டிங் ஸ்கூலில் தங்கி படித்து வரும் குழந்தைக்கும் எழுதிவைத்தேன். நான் நீட்டிய விவாகரத்து பத்திரத்தை வாங்கி துண்டு, துண்டாக கிழித்து எறிந்தாள் அகல்யா.

அந்த வேளையில் என் மனதின் மூலையில் வலி கண்டதை மறுப்பதற்கில்லை. என்னோடு பத்து வருடமாக குடும்பம் நடத்தியவள் திடீரென ஒரே நாளில் அந்நியமாக முடியுமா? ஆனாலும், என் முடிவிலிருந்து பின்வாங்குவது என்னால் முடியாத காரியம் என்பதில் நான் தெளிவாகவே இருந்தேன். இறுதியாக என் முன் கதறி அழுதாள் அகல்யா. நான் எதிர்பார்த்ததுதான். அவளின் அழுகை எனக்கு ஒரு வகையில் நிம்மதியைத்தான் தந்தது.

மறுநாள் காலையில் அவள் நீட்டிய பேப்பரில் விவாகரத்துக்கான நிபந்தனை எழுதப்பட்டிருந்தது..
கார், பங்களா எதுவும் வேண்டாம். விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் முன் ஒரே ஒரு மாதம் கால அவகாசம் தரவேண்டும். அந்த ஒரு மாதமும் இருவரும் எந்த சங்கடமும், வருத்தமும் இன்றி சாதாரணமாகவே வாழவேண்டும். இதுதான் அந்த நிபந்தனை!

நிபந்தனைக்கு காரணம், என் மகன்தான். கோடை விடுமுறையில் வீட்டுக்கு சந்தோஷமாக வரும் குழந்தைக்கு நாங்கள் பிரியப்போகும் விஷயம் துக்கத்தை தந்துவிடக்கூடாது என்பதில் அகல்யா கவனமாக இருந்தாள்.

அவள் விவாகரத்து நிபந்தனைகள் அடங்கிய பேப்பரை நீட்டிக்கொண்டே, ‘‘தினேஷ், நமக்கு திருமணமான நாளன்று நான் எப்படி இந்த வீட்டிற்குள் வந்தேன் என்று ஞாபகம் இருக்கிறதா?’’ என்று கேட்டாள். அவள் கேட்ட அடுத்த விநாடி, அவளை கையில் அலேக்காகத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நான் நுழைந்த காட்சி மனக்கண் முன் தோன்றியது.

‘‘நன்றாகவே ஞாபகம் இருக்கிறது!’’ என்றேன்.

‘‘அதைப் போலவே உன்னோடு வாழப் போகும் இந்த ஒரு மாதமும் என்னை படுக்கை அறையில் இருந்து வீட்டு வாசல் வரை தினமும் தூக்கிக்கொண்டு போய் விடுவாயா?’’ ஆர்வமாய் கேட்டாள் அகல்யா. நான் புன்னகையோடு தலையாட்டினேன். நாங்கள் சேர்ந்து வாழப்போகும் கடைசி நாட்கள் அவள் விரும்பியபடியே ரொமான்டிக்காக இருக்கட்டுமே!

என் மனைவியின் விவாகரத்து நிபந்தனையை ரேணுகாவிடம் சொன்னபோது அவள் விழுந்து, விழுந்து சிரித்தாள். ‘‘உன் மனதை மாற்ற ஏதாவது செய்வாள் என்று பார்த்தால், அற்பமாக தூக்கிக் கொண்டு போய்விடச் சொல்கிறாளா?’’ என ரேணுகா சிரித்தபோது, அது ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.

முதல் நாள்.. அகல்யாவை நான் தூக்கிக் கொண்டு வாசல் நோக்கி நடக்கிறேன். ஆச்சரியமாக பார்த்த எங்களின் மகன் கைதட்டிக் கொண்டே பின்னால் வருகிறான். சில அடிகள் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தபோது அவள் கண்களை மூடிக்கொண்டு, ‘‘நமது பிரிவு இன்றிலிருந்து துவங்கிவிட்டது. குழந்தைக்குத் தெரியவேண்டாம்!’’ என்றாள்.

நான் அவளை வீட்டு வாசலில் இறக்கிவிட்டேன். அவள் அலுவலகம் செல்ல பேருந்து பிடிக்க ஓடினாள். நான் காரில் எனது அலுவலகம் கிளம்பினேன்.

இரண்டாம் நாள்.. நான் தூக்கியபோது அகல்யா என் மார்பிலே சாய்ந்துகொண்டாள். அவளைப் பார்த்துக் கொண்டே நடந்த நான், பாசமான இந்தப் பெண்ணை நீண்ட நாளுக்கு இப்படி பார்த்துக் கொண்டே இருக்க முடியாது என தோன்றியது.

மூன்றாம் நாள்.. நான் தூக்கி நடக்கையில் வெளியில் தோட்டத்தின் பக்கம் குழி தோண்டி இருப்பதால் அலுவலகம் கிளம்பும்போது “கவனமாக போ..” என என் காதோரம் முணுமுணுத்தாள் அகல்யா.

நான்காம் நாள், நான் அகல்யாவைத் தூக்கியபோது நாங்கள் எவ்வளவு இணக்கமான தம்பதியாக இருந்திருக்கிறோம் என்பதை உணர முடிந்தது. என் மனதுக்குப் பிடித்த பெண்ணை தூக்கி நடப்பதுபோன்ற ஒரு சந்தோஷம் மெல்லப் பிறந்ததை உணர்ந்தேன்.

ஐந்தாம், ஆறாம் நாட்களில் எனது சட்டைகளை அவள் அயர்ன் செய்து கொடுத்தாள். அவளுக்காக நான் சமைக்க ஆரம்பித்தேன். இது எதையும் நான் ரேணுகாவிடம் கூறவில்லை.

அடுத்த நாள் அலுவலகம் கட்டிச் செல்ல நெடுநேரம் சுடிதார் தேடிக் கொண்டிருந்த அகல்யா, ‘‘என் சுடிதார்கள் எல்லாமே குண்டாகிவிட்டன..’’ என்றாள் சிரித்தபடி.
அப்போதுதான் அவளை கூர்ந்து கவனித்தேன். மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவளை தினமும் எளிதாக தூக்க முடிவதால் நான் பலமாகத்தான் இருப்பதாக நினைத்திருந்தேன். உண்மை அதுவல்ல.. அவள்தான் மிகவும் ஒல்லியாகிவிட்டாள்.

இந்த நேரம் எங்கள் மகன் ஓடிவந்து “அப்பா, அம்மாவை இன்னும் தூக்கவில்லையா?” என்றான். அவனுக்கு இது அன்றாட வாழ்வில் ஒரு நிகழ்வாகவே ஆகிப் போனது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனை அருகே அழைத்து முத்தம் கொடுத்தாள் அகல்யா. எனக்குள் ஏதோ ஒன்று உடைபட்டதுபோல் இருந்தது. என் மனம் எங்கே மாறிவிடுமோ எனப் பயந்து தலையை திருப்பிக் கொண்டேன். அன்று அகல்யாவை நான் தூக்கி சுமந்தபோது எனது திருமண நாள் என்னையும் அறியாமல் ஞாபகத்திற்கு வந்துபோனது. மெலிந்து போன அவளது தேகம் பார்த்து ஏதோ இனம்புரியாத கவலையும்கூட!

மாதத்தின் இறுதி நாள்! எங்களின் பையன் பள்ளி சென்றுவிட்டான். நான் அகல்யாவை தூக்கினேன். என் வாழ்வில் அவளை தூக்கிச் சுமக்கும் இறுதி நாள் இதுதான் என நினைத்துக்கொண்டபோது என்னால் ஒரு அடிகூட நடக்க முடியவில்லை. என் கண்களை உற்றுப் பார்த்தக்கொண்டே அகல்யா கேட்டாள், “தினேஷ், நாம் முதியவர்களாகும்வரை என்னை இப்படி தூக்கிச் சுமப்பாயா?”

அகல்யாவை நான் இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். வாசலில் அவளை இறக்கிவிட்டதும் ஓடோடிச் சென்று காரில் ஏறி ரேணுகாவின் வீட்டிற்கு பறந்தேன். சற்று தாமதித்தாலும் என் மனம் மீண்டும் மாறிவிடுமோ என அச்சமாக இருந்தது. கதவைத் திறந்த ரேணுகாவிடம் “மன்னித்து விடு ரேணுகா, நான் என் மனைவி அகல்யாவை விவாகரத்து செய்யப் போவதில்லை!” என்றேன்.

நான் விளையாட்டுத்தனமாக பேசுவதுபோல ரேணுகா பார்த்தாள். “சத்தியமாக நான் விவாகரத்து செய்யப் போவதில்லை. என் திருமண வாழ்க்கை அலுப்பாகிப் போனது உண்மைதான். நானும், அகல்யாவும் எங்கள் உறவின் உன்னதம் புரியாமலேயே இருந்துவிட்டோம். நாங்கள் யார் என்று இப்போது எங்களுக்குப் புரிந்து விட்டது. இனி அவளை நான் பிரிவதாய் இல்லை. என்னை மன்னித்துவிடு, ரேணுகா!” – நான் உடைந்து போய் சொன்னேன்.

வேகமாக எழுந்து வந்த ரேணுகா என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். கதவை அறைந்து சாத்திவிட்டு அழ ஆரம்பித்தாள்.

நான் காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன். வழியில் பொக்கே ஷாப். என் அருமை மனைவி அகல்யாவுக்கு பிடித்தமான ஒரு பொக்கேவை ஆர்டர் செய்தேன். என் வீட்டிற்கு அனுப்புமாறு முகவரி தந்தேன். ‘‘பொக்கேயில் என்ன எழுதுவது?’’ எனக் கேட்டாள் கடைக்காரப் பெண்.

‘‘அன்பே, நாம் முதியவர்களாகும் வரை உன்னை தினமும் தூக்கிச் சுமப்பேன்!’’ என எழுதச் சொன்னேன்.

தமிழில்: லஜ்ஜாவதி

About The Author